மதுரை: தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த ராஜன் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார். அதில் கூறியிருந்ததாவது, "எனது மனைவி கடந்த 2021-ம் ஆண்டில் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், 6.11.2021 அன்று அதிகாலை 2 மணி அளவில் தென்காசி முடியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன்.
அப்போது அங்கு பணியிலிருந்த அரசு மருத்துவர், என் மனைவியை பரிசோதித்தார். பின்னர் என் மனைவிக்கு ஊசி செலுத்தினார். சில மணி நேரத்திற்கு பின்பு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை என் மனைவி வயிற்றிலிருந்து எடுக்க வேண்டும் என்றும் அதற்கான உபகரணங்கள் வீட்டில் இருப்பதாகவும் மருத்துவர் கூறி, காலம் கடத்தினார்.
அவர் முறையான சிகிச்சை அளிக்கவில்லை. இதற்கிடையே என் மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு, குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச்சென்றேன். என் மனைவி உடல் நிலை மிக மோசமான நிலைக்குச் சென்றது. இதனால் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்து, 60 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர் குணமாகாததால், தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்றார்.
இதையும் படிங்க: தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயம் குறித்து அரசு பதிலளிக்க உத்தரவு!
ஆரம்ப சுகாதார நிலையத்தில் எனது மனைவியின் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்கும்போது, தவறுதலாக மலக்குடலை கத்தரித்தது தெரியவந்தது. இதன் காரணமாக என் மனைவி கடும் அவதிக்கு ஆளானார். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரின் அலட்சியத்தால் ஏராளமான பணத்தையும் செலவு செய்து, மன உளைச்சலுக்கு ஆளானோம்.
எனவே சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்". இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரர் புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்