தஞ்சையில் ஊர்வலம் சென்ற 500 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்..! கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடு..!
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: வருகிற 25ஆம் தேதி திங்கட்கிழமை உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு ஜனவரி 01ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு இன்று (டிச 21) மாலை, கும்பகோணம் மாநகர் காமராஜர் சாலையில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான தூய அலங்கார அன்னை பேராலய வளாகத்திலிருந்து, 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, கையில் பலூன்கள் ஏந்தி, அலங்கார அணிவகுப்பு ஊர்தியுடன், மாநகர் முக்கிய வீதிகள் வழியாகப் பேரணியாகச் சென்றனர்.
மேலும், பொது மக்களுக்குக் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து, தங்களது அன்பை அனைவருடனும் பகிர்ந்து கொண்டபடி உற்சாகமுடன் அணிவகுத்துச் சென்று, மீண்டும் தூய அலங்கார அன்னை பேராலய வளாகத்தில் வந்து இப்பேரணி நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளைக் கும்பகோணம் மறை மாவட்ட ஆயர், மறை மாவட்ட முதன்மை குரு மற்றும் பேராலய பங்கு தந்தையர்கள் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.