புதுச்சேரியை குளிர்வித்த சூறைக்காற்று கனமழை... மரங்கள் முறிவால் வாகனங்கள் பலத்த சேதம்!

🎬 Watch Now: Feature Video

thumbnail

புதுச்சேரியில் திடீரென ஏற்பட்ட மழை மற்றும் பலத்த காற்றால் 50க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் நகரின் 10 இடங்களில் சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது மரங்கள் விழுந்ததால் வாகனங்கள் சேதமடைந்தன. கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று பெய்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

இருப்பினும் இந்த திடீர் மழையின் காரணமாக புதுச்சேரி நகரப் பகுதியில் பல மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரம் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மழை பெய்தது. லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் புற வழிசாலை ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பாதுகாப்பு கருதி புதுச்சேரி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

நள்ளிரவு ஒரு மணி அளவில் நகர பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு புஸ்சி வீதி, பாரதி வீதி, முத்துமாரியம்மன் கோயில் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, சட்டமன்றம் எதிர்புரம் உட்பட பல இடங்களில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. அவை சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் மீது விழுந்ததில் அவை சேதமடைந்தன.

மறைமலை அடிகள் சாலை, அண்ணா சாலை, லெனின் வீதி ஆகிய இடங்களில் விளம்பர பேனர்கள் தூக்கி வீசப்பட்டன. கடலூர் சாலையில் சாய்ந்த மின்கம்பத்தை இளைஞர்கள் உதவியுடன் உருளையன்பேட்டை போலீசார் அப்புறப்படுத்தினர். இரவு 10 மணிக்கு நிறுத்தப்பட்ட மின்சாரம் அதிகாலை 4 மணி முதல் படிப்படியாக மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. மழையும் காற்றும் நின்றதால்  அதிகாலை 3 மணி முதல் தீயணைப்பு துறையினர் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க: ட்ரிங் ட்ரிங்... நெல்லை தேரோட்டத்தில் கவனத்தை ஈர்த்த 90’ஸ் கிட்ஸ்களின் மிட்டாய்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.