Dharmapuri - அரசுப் பள்ளி மாணவர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் - lunch prepared for the students
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உரையாடி உணவு உட்கொண்ட செயல் மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதி வண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு தேர்வான இரண்டு மாணவர்களை வரவழைத்துப் பாராட்டினார். நிகழ்ச்சி முடிந்து திரும்பும்பொழுது பள்ளி மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அதை கவனித்த எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் மாணவிகளிடம், பள்ளியில் வழங்கும் உணவு தரமாக இல்லையா, ஏன் வீட்டில் இருந்து உணவு கொண்டு வந்து சாப்பிடுகிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு மாணவர்கள் மௌனமாக இருந்தனர்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர் பள்ளியில் மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டிருந்த மதிய உணவை பள்ளி மாணவ மாணவிகள் உடன் தரையில் அமர்ந்து உட்கொண்டார். உணவு உட்கொண்டு கொண்டே பள்ளியில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லையா என கேட்டு, இல்லை என்றால் தனக்கு தகவல் தெரிவிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் இதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.