கோவை அரசு மருத்துவமனையில் மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாம் துவக்கம்!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோவை அரசு மருத்துவமனையில், மிஷன் இந்திரதனுஷ் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் துவக்கி வைத்தார். இந்த மருத்துவ முகாம் மூன்று கட்டங்களாக இன்று (செப்.7) முதல் 12 ஆம் தேதி வரையும், செப்டம்பர் 13 ஆம் தேதியிலிருந்து 16 ஆம் தேதி வரை, அக்டோபர் 9 ஆம் தேதியிலிருந்து 14 ஆம் தேதி வரையும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 வயது குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகளையும், இதுவரை செலுத்த முடியாமல் தவறிய தடுப்பூசி தவணைகளை உடனே செலுத்துமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். கோவை மாவட்டத்தில் இம்முகாமிற்கு தேவையான தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தடுப்பூசி வழங்கும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பொது சுகாதாரம் மற்றும் குழந்தைகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் துறைகளைச் சார்ந்த களப்பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருணா தெரிவித்துள்ளார். இந்த முகாமில் அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளாக நகர்ப்புறங்களில் உள்ள தற்காலிக குடிசை பகுதிகள், செங்கல் சூளைகள், மலைக் கிராமங்கள் மற்றும் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள கிராமங்கள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டு உள்ளன.
வெளிமாநிலத்திலிருந்து வேலை வாய்ப்பிற்காக கட்டிட வேலை மற்றும் தொழிற்சாலை பகுதிகளுக்கு புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படாமல் இருப்பின் அவர்கள் பணிபுரியும் கம்பெனியில் மேனேஜர்கள் மூலம் தெரியப்படுத்தி, அங்கன்வாடி மையங்கள் அல்லது துணை சுகாதார நிலையங்களுக்கு சென்று தடுப்பூசி பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த முகம் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.