மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா - அமைச்சர் ரகுபதி உறுதி! - ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டுக்கு கவர்னர் எதற்கு
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை: மீண்டும் புதிய ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா இயற்றப்பட்டு ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்படும் என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நற்சாந்துபட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி நேற்று (மார்ச்.11) பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் தற்கொலை செய்கிறார்கள். ஆகவே, குதிரை ரேசை ஒழித்தது போல், ஆன்லைன் சூதாட்டமும் ஒழிக்கப்படும். மக்கள் நன்மைக்காக அதை தடுக்க சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம்.
ஆனால், இதற்கு சட்டம் இயற்ற உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்கிறார். ஏற்கனவே, நீதிமன்றமே சட்டம் இயற்றலாம் என்று உத்தரவு பிறப்பித்ததை கூட ஆளுநர் கவனிக்க தவறிவிட்டார்" என்று கூறினார்.
இந்நிலையில், மீண்டும் புதிய ஆன்லைன் தடைச் சட்டம் இயற்றப்பட்டு ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்றும் இதன் மூலம் தமிழ்நாடு மக்களை ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முழு வீச்சில் ஈடுபடும் என்றார். ஒரு காலத்தில் பேரறிஞர் அண்ணா, 'ஆட்டுக்கு தாடி எதற்கு நாட்டுக்கு கவர்னர் எதற்கு' என்று சொன்னதை பல ஆளுநர்கள் நிரூபித்து கொண்டு இருப்பதாக அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், சட்டமன்றத்திற்கு என்ன அதிகாரம் உள்ளது என்பது பலருக்கு புரியவில்லை. பத்து தலையுடன் வரும் ராவணனான ஒன்றிய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்றார். இந்தியாவிலேயே ஒரு புதிய எழுச்சியை திமுக கூட்டணி உருவாக்கும் என்றார்.
22 மாத ஆட்சிக்கு சோதனையாக வந்த ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெற்றதாக தெரிவித்தார். மேலும், எல்லா துறைகளிலும் மாணவர்கள் படிப்பதற்காக 7.5% உள் ஒதுக்கீடு கொடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கமிஷன், கலெக்சன், கரப்ஷன் செய்வதில் மன்னன் என்றும் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டினார்.