நல்ல நிகழ்ச்சியில் இது குறித்து பேச வேண்டாம்.. அமைச்சர் முத்துசாமி கூறியது என்ன?
🎬 Watch Now: Feature Video
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் ஈரோடு மண்டலம் சார்பில், சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் 27 ஜோடி மணமக்களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஜோடி மணமக்களுக்கும் 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 26 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் முத்துச்சாமி, "தமிழ்நாடு முதலமைச்சர் அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பொறுப்பில் இலவச திருமணம் நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தபடி கடந்த ஆண்டு 500 திருமணங்கள் நடத்தப்பட்டது.
அதேபோல் இந்த ஆண்டு 600 இலவசத் திருமணங்களை தாண்டும் என தெரிகிறது. தற்போது பண்ணாரி அம்மன் கோயிலில் இன்று 75 ஆயிரம் ரூபாய் செலவில் 27 இணைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ராஜகோபுரம் கட்டுமானப் பணி துரிதமாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோயிலுக்கு அருகிலேயே உள்ள 25 ஏக்கர் நிலத்தை வனத்துறை கொடுப்பதற்கு தயாராக உள்ளது. இதற்கு மாறாக 50 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை கொடுக்க வேண்டியுள்ளது. மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்” என தெரிவித்தார். தொடர்ந்து, தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும், நல்ல நிகழ்ச்சியில் அதைப் பற்றி பேச வேண்டாம் என்றும் அமைச்சர் பதில் அளித்தார்.