அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சு திடீர் ஆய்வு.. தரமான மருத்துவம் வழங்க அறிவுரை!
🎬 Watch Now: Feature Video
Published : Aug 22, 2023, 2:02 PM IST
ராணிப்பேட்டை: வேலூர் அரசு மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிகழ்ச்சி முடிந்து சென்னை திரும்பும்போது ஆற்காடு அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வேலூர் அடுக்கம்பாறை தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை திருடு போன சம்பவம் குறித்த ஆய்விற்காகவும், வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் பயின்ற மருத்துவர்களுக்கு பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராணிப்பேட்டைக்கு சென்றார்.
நிகழ்ச்சியை முடித்து கையோடு வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எவ்வித தகவலும் அளிக்காமல் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திடீரென வருகை தந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அறை, மருந்து வழங்கும் அறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு தரமான மருத்துவம் வழங்க வேண்டும் என மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.