'He is doing Wrong Things என ஆளுநரை அதிகாரியிடம் சொன்னேன்' - அமைச்சர் துரைமுருகன் பேச்சு - Minister Duraimurugans speech on Governor RN Ravi
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை: 'சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தவறாகப் பேசியபோது, அதிகாரி ஒருவரிடம் He is doing wrong things எனச் சொன்னேன்' என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் இந்த அரசு மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்த்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியத்திற்குட்பட்ட ஓசூர் கிராமத்தில் இன்று (மே.10) மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்துகொண்டு 11 சுய உதவிக்குழுக்கள், 247 பயனாளிகளுக்கு மூன்று கோடியே 76 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், 'நீர்வளத்துறை அமைச்சர் நான். சட்டமன்றத்தை நான்தான் கவனிக்க வேண்டும்; அதை மட்டுமல்லாமல் குறிப்பாக, ஆளுநரையும் நான்தான் கவனிக்க வேண்டும். ஒருமுறை ஆளுநர் சட்டமன்றத்தில் தவறாகப் பேசும்போது, அதிகாரியை அழைத்து தவறாகப் பேசுகிறார் (HE IS DOING WRONG THINGS) என்று நான் தான் சொன்னேன். அது மட்டும் அல்லாமல் நான்தான் கட்சியின் பொதுச்செயலாளர். எனக்கு அங்கே ஆயிரம் வேலைகள் உண்டு. மக்களின் பிரச்னைகளை மனுவாகப் பெற்று பிரச்னைகளை தீர்ப்பது தான் மனுநீதிநாள் முகாம்' எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'பொன்னை பகுதியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலமும், அதே பகுதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் தடுப்பணையும் கட்டப்பட்டு வருவகிறது. இதன் மூலம் தண்ணீர் பஞ்சம் நீங்கும். தேர்தலின்போது, என்னுடைய தொகுதிக்கு அளித்த வாக்குறுதிகளின் படி சேர்காடு கூட்ரோட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டப்படும்' எனக் கூறினார்.
அதேபோல், மக்களின் குடிநீர் பிரச்னைகளை தீர்க்க இப்பகுதியில் காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வருவதென நினைத்ததாகவும்; ஆனால், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கு குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் பிரச்னையினை இந்த அரசு தீர்த்து வருவதாகவும் தெரிவித்தார்.