நாடு முழுவதும் 7 ஜவுளி பூங்காக்கள்; தமிழகத்தில் முதல் ஜவுளிப்பூங்கா - மத்திய இணை அமைச்சர் தகவல் - Tamil Sangamam

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 26, 2023, 10:45 AM IST

நாடு முழுவதும் 7 இடங்களில் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அகில இந்திய அளவில் முதலாவதாக தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படுவதாக மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது, ''மத்திய அரசும் குஜராத் மாநில அரசும் இணைந்து செளராஷ்டிர தமிழர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, செளராஷ்டிர தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்துகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 17,750 பேர் இணையதளம் வாயிலாகப் பதிவு செய்துள்ளனர். செளராஷ்டிர தமிழர்களின் வாழ்க்கை வரலாறு, கலைஞர்களின் வாழ்க்கை, பொருளாதார நடவடிக்கைகள் மற்றும்  கலாசார நடைமுறைகள் மேலும் இந்திய கலாசார ஒற்றுமையை எடுத்துக்கூறும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும்விதமாக சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்கிற பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் குஜராத் அரசு நல்ல முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பல்வேறு துறைகளில் தமிழகம் மற்றும் குஜராத் இடையே மிகப்பெரிய ஒருங்கிணைப்பு உருவாகும்.

நாடு முழுவதும் 7 இடங்களில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் தொடங்கிடும் வகையில்  நாட்டிலேயே முதலாவதாக விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா தொடங்கப்பட்டுள்ளது. இதில் 50 சதவீத நிதி மத்திய அரசு சார்பில் அளிக்கப்படும். முற்றிலும் எந்தவித சுற்றுச்சூழல் பிரச்னைக்கும் இடம் இல்லாத வகையில் இந்த ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைய உள்ளது.

நீர் மறுசுழற்சி, ஆயத்த ஆடைப்பூங்கா, நெசவாளர்களுக்கான பொது சேவை மையம் உள்ளிட்டப் பல்வேறு அம்சங்களுடன் ஜவுளிப்பூங்கா அமைய உள்ளது. இதன்மூலம் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சேலத்தில் ஜவுளிப்பூங்கா தொடங்கப்படுவது குறித்து இதுவரை எந்தவித முன்மொழிவும் தமிழக அரசிடம் இருந்து வரவில்லை. முன்மொழிவு வந்த பிறகு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் சுற்றுலாத் தலங்கள், ஆன்மிக நகரங்களை இணைக்கும் வகையில் பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.

பேட்டியின் போது, குஜராத் மாநில கூட்டுறவுத் துறை ஜெகதீஷ் விஸ்வகர்மா, குஜராத் காந்தி நகர் மாவட்ட ஆட்சியர் பிரவீனா ஆகியோர் உடன் இருந்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.