"யார் எதிர்த்தாலும் நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும் நம்மவரே!" கோவையில் மக்கள் நீதி மய்யம் போஸ்டர்! - coimbatore news
🎬 Watch Now: Feature Video
Published : Sep 22, 2023, 11:12 AM IST
கோயம்புத்தூர்: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று கோவை வருகிறார். 11 மணியளவில் விமானம் மூலம் கோவை வந்தடையும் அவர் தனியார் நட்சத்திர ஹோட்டலில் கோவை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்கிறார். அதனை தொடர்ந்து மாலை கணியூர் பகுதியில் உள்ள பார்க் தனியார் கல்லூரியின் 50ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில் கமல்ஹாசனை வரவேற்கும் விதமாக கோவை தெற்கு வார்டு மக்கள் நீதி மய்யம் சார்பில் ரயில் நிலையம், டவுன்ஹால் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், "யார் எதிர்த்தாலும்! எந்த மலை தடுத்தாலும்! இமய மலையாய் உம்மை தூக்கி பிடிக்கும் கோவை மக்களின் குரலாக 2024 நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க போகும்... நம்மவரே! வருக வருக..!" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த சட்ட மன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன் வெற்றி வாய்பை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நழுவவிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றிட வேண்டும் என்ற முனைப்பில் மக்கள் நீதி மய்யம் தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து கோவை தொகுதியை குறிவைத்து கமல்ஹாசன் காய் நகர்த்தி வருகிறார்.
தற்போது கமல்ஹாசன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் நட்பு ரீதியாக நெருக்கமான நிலையில் இருக்கிறார். இதனால் காங்கிரஸ் தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் இணைந்து அவர் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.