கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக திருப்பணி துவக்கம் - தஞ்சாவூர்
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: மகாமக பெருவிழா தொடர்புடைய 12 சைவத்திருத்தலங்களில், முதன்மையான தலமாக விளங்குவது கும்பகோணம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வர் சுவாமி திருக்கோயில் ஆகும். இக்கோயிலுக்குக் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 05ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது ரூபாய் எட்டு கோடி திட்ட மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யத் திட்டமிட்டு அதற்கு ரூபாய் 4.50 கோடி அரசிடம் இருந்து நிதியுதவி பெறவும், எஞ்சியவை, உபயதாரர்கள் மூலம் நிறைவு செய்வது எனத் திட்டமிட்டு அதற்காகக் கடந்த 24ம் தேதி வெள்ளிக்கிழமை மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்று காலை 4ம் கால யாகசாலை நிறைவாக, மகா பூர்ணாஹதியும், மகா தீபாராதனையும் நடைபெற்று, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க உதிரி மலர்கள், அரிசிப்பொரிகள் தூவ கடங்கள் புறப்பாடும் நடைபெற்றது. பஞ்சமூர்த்திகள் மண்டபத்தில், சித்ரபிம்பங்களுக்கு மலர் மாலைகள் சாற்றி, சந்தன குங்குமப் பொட்டு வைத்து, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, கலசாபிஷேகம் அதனை அடுத்து மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து கோயில் யானை மங்களம் முன்பு செல்ல அதனைத் தொடர்ந்து அறநிலையத்துறை அலுவலர்கள், உபயதாரர்கள் பொது மக்கள் ஆகியோர் திரண்டு வர, ராஜகோபுரம் அருகே, பந்தக்காலுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பந்தக்கால் நடும் குழியில், நவதானியங்கள் போட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க, பந்தக்கால் நடப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து மாநகராட்சி துணை ஆணையர் சு.ப.தமிழழகன் விமான கோபுர பணி தொடக்கமாக உளி மற்றும் சுத்தியல் கொண்டு ஒரு பகுதியை உடைத்து, திருப்பணியை முறைப்படி தொடங்கி வைத்தார். இதில் அறநிலையத்துறை மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் மோகனசுந்தரம், கும்பகோணம் உதவி ஆணையர் சாந்தா, கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், மற்றும் உபயதாரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இக்கோயிலுக்கான மகா கும்பாபிஷேகம் திருப்பணிகள் யாவும், பாரம்பரிய முறைப்படி, பழமை மாறாமல், முற்றிலும் கடுக்காய், முட்டை, சுண்ணாம்பு கொண்டு செய்திடவும், இவை முழுமையாக நிறைவு பெற்ற பிறகு, இரு ஆண்டுகளில் மகா கும்பாபிஷேகம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.