அதானி வெறும் பொம்மைதான் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு - Vaikkam
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வைக்கம் நூற்றாண்டு விழா வரும் 28ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில், ஈரோட்டில் இருந்து வைக்கம் வரை பிரம்மாண்ட ஊர்வலத்தை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.
கேரள காங்கிரஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் இணைந்து பேரணி நடத்த இருக்கிறது. இந்த பேரணியானது, வருகிற 28ஆம் தேதி ஈரோட்டில் இருந்து தொடங்கி, 30ஆம் தேதி வைக்கம் சென்றடையும். அதற்கான ஏற்பாடுகளை ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையிலான குழு ஏற்பாடு செய்து வருகிறது. அந்தப் பேரணியை நான் தொடங்கி வைக்கிறேன். இந்தப் பேரணி வரலாற்று சிறப்புமிக்க பேரணியாக அமையும்.
பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது வைக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் கலந்து கொண்டார். அங்கேயே தங்கியிருந்து போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் சிறை சென்றார். அந்தப் போராட்டத்தில் காந்தியும் பங்கேற்றார்.
எனவே அந்த நினைவைப் போற்றுகிற வகையில், ஈரோட்டில் இருந்து வைக்கத்திற்கு பேரணி நடைபெற இருக்கிறது. அதானி என்பவர் வெறும் பொம்மைதான். அவரை இயக்குவதே மத்திய அரசுதான். அவர்கள் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு, அவர்களே எப்படி விவாதிப்பார்கள்?” என கூறினார்.