கார்த்திக்கை சோமவார விஷேசம் - அம்பாள் மற்றும் பாணபுரீஸ்வரருக்கு சிறப்பு சங்காபிஷேகம்!
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: கும்பகோணம் சோமகலாம்பிகா சமேத பாணபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் இன்றிரவு, 3வது கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு 1008 வலம்புரி சங்குகளில் நிரப்பப்பட்ட புனிதநீரை கொண்டு விசேஷ சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு மகா பூர்ணாஹதி சம்மர்பிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
மகா பிரளய காலத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தை பிளக்க சிவபெருமான் பாணபுரம் என்னும் இத்தலத்தில் இருந்துதான் பாணம் தொடுத்தார். பாணம் தொடுத்த இடமாதலால், இந்த இடத்திற்கு பாணாதுறை என்னும் பெயர் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றது. வியாச முனிவர் காசியில் பெற்ற சிவபிரதோஷம் நீங்க இறைவன் கட்டளைப்படி மகாமக திருக்குளத்தில் நீராடிய பின் இறைவன் பாணபுரீஸ்வரர் மற்றும் இறைவி சோமகலாம்பாளை வழிப்பட்டதாகவும், மற்றொரு புராணக்கதையாக வங்கதேச மன்னன் சூரசேனன் அவரது மனைவி காந்திமதி கொடிய குஷ்ட நோயினால் அவதியுற்ற போது அவரும் பாணபுரீஸ்வரரை வணங்கிய பின் அவரது மனைவியின் நோய் நீங்கப்பெற்றதோடு அழகிய ஆண் மகவையும் பெற்றனர் அருள் நிறைந்த ஸ்தலமானதாக இறைநம்பிக்கையாளர்கள் மத்தியில் நம்பப்படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவ ஸ்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து திங்கட்கிழமைகளிலும் கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு 1008 வலம்புரி சங்குகளில் உள்ள புனிதநீரை கொண்டு பாணபுரீஸ்வருக்கு சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதையடுத்து இன்றிரவு(டிச.4), 3வது கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, சுவாமி மற்றும் அம்பாளுக்கு இரு புனிதநீர் நிரப்பிய கடங்களை பிரதானமாக ஸ்தாபித்தும், 1008 வலம்புரி சங்குகளிலும் புனிதநீர் நிரப்பி வரிசையாக இரும்பு பலகையில் நெற்களை பரப்பி, ஒவ்வொரு சங்கிற்கும் விசேஷ மலர்கள் சாற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை வாசிக்க, நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்களுடன் மங்கல வாத்தியங்கள் முழங்க, சிறப்பு யாகம் வளர்த்து மஹா பூர்ணாஹீதியும், அலங்கார தீபாராதனை மற்றும் பஞ்சார்த்தியத்திற்க்குப் பிறகு, கடங்கள் புறப்பாட்டுடன் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1008 வலம்புரி சங்குகளில் உள்ள புனித நீரை கொண்டு பாணபுரீஸ்வரசுவாமிக்கு விசேஷ சங்காபிஷேகம் 3வது வாரமாக இன்றிரவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது போன்று இவ்வாண்டு காரத்திகை சோமவார நிறைவாக, வரும் டிசம்பர் 11ம் தேதி திங்கட்கிழமையும் தொடர்ந்து 4வது கார்த்திகை சோமவார 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.