சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா! - aathi mariamman temple inam samayapuram
🎬 Watch Now: Feature Video
திருச்சி: சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு முதன்மையாக விளங்குவது, இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோயில் ஆகும். இந்த கோயிலில் மாசி மாத தேரோட்ட விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. இதில் கோயில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கோயில் முன்புறத்திலிருந்து பூ தட்டுகளை ஏந்தி வந்தனர். அப்போது அவர்கள் மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கைகள் ஜொலிக்க ஆதி மாரியம்மன் கோயில் தேரோடும் வீதியில் வலம் வந்து கோயிலுக்குள் வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து கோயில் குருக்கள், ஒவ்வொரு தட்டுகளாக வாங்கி ஆதி மாரியம்மனுக்குப் பூக்களைச் சாற்றினார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சமயபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்களும், திரளான பக்தர்களும் பூக்களை தட்டுகளில் ஏந்தி கோயிலுக்கு வந்து, அம்மனுக்குப் பூக்களைச் சாற்றினர்.
இதனையடுத்து காலையிலிருந்து திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனுக்குப் பூக்களைச் சாற்றி சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஆதி மாரியம்மன் கோயிலுக்குப் பாதயாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் இணை ஆணையர் தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள்கள் உள்பட கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.