உயர் மின்னழுத்தத்தால் வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. இரண்டு நாட்களுக்கு கரண்ட் கட்.. மக்கள் வேதனை!
🎬 Watch Now: Feature Video
தேனி: ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் ஆலந்தளிர் என்னும் மலைக் கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்களது வீடுகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் பயன்படும் வகையில் 100 KVA திறன் கொண்ட மின்மாற்றி மயிலாடும்பாறை மின்வாரிய அலுவலகத்தால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆலந்தளிர் கிராம நரியூத்து சாலையோரம் அமைக்கப்பட்டது.
தற்போது மின்சார பயன்பாடு அதிகரித்து வருவதாலும், கடும் வெயில் உள்ளிட்ட சீதோஷ்ண நிலை மாற்றம் நிலவுவதாலும் திடீரென இந்த மின்மாற்றி தீப்பற்றி எரிந்தது. இதை அடுத்து மின்மாற்றியில் உள்ள ஆயில் மற்றும் ஆசிட்கள் சிதறி நாலாபுறங்களிலும் விழுந்து தீப்பிடித்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மயிலாடும்பாறை மின்வாரிய அலுவலகத்திற்கும் கடமலைக்குண்டு துணை மின்நிலையத்திற்கும் தகவல் அளித்ததை அடுத்து இப்பகுதியில் மின்சாரம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட மயிலாடும்பாறை இளநிலை மின்பொறியாளர் மின்மாற்றி வெடித்துள்ளதால் அதை சரி செய்ய இரண்டு நாட்கள் வரை ஆகும் என்று தெரிவித்துள்ளார். அதுவரை ஆலந்தளிர் கிராமத்திற்கும் இப்பகுதி விவசாய மின் மோட்டார்களுக்கும் மின்விநியோகம் இருக்காது என மின்துறை அறிவித்துள்ளது. இதனால் ஆலந்தளிர் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.