ஈபிஎஸ் 69ஆவது பிறந்தநாள் - 200 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்!
🎬 Watch Now: Feature Video
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றைய தினம் தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக சேலம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் தமிழகம் முழுவதிலும் இருந்து படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் அமைந்து உள்ள சேலம் நெடுஞ்சாலை நகர் சாலையில் கூட்டம் அலைமோதுகிறது.
இதன் காரணமாக சேலம் நெடுஞ்சாலைநகர் முழுவதும் காவல் துறைப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் புறநகர் மாவட்டம் சார்பாக 69 கிலோ எடை கொண்ட கேக் ஏற்பாடு செய்துள்ளனர். இதேபோன்று சேலம் மாவட்டம், மேச்சேரி, ஓமலூர் ஆகிய ஒன்றியச் செயலாளர்கள் தனித்தனியாக பிரமாண்டமான கேக்கினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதை அடுத்து அனைத்து கேக்குகளையும் ஒன்றாக இருபது அடி நீளத்திற்கு வைத்து மொத்தமாக 200 கிலோ கேக்கினை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி, பிறந்த நாளை கொண்டாடினார்.
அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.பி.முனுசாமி, பெஞ்சமின் உள்ளிட்டோர் வருகை தந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இது மட்டுமில்லாமல் அண்ணா சங்கத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என ஏராளமானோர் வருகை தந்தனர். தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து வருவதால் சேலம் நெடுஞ்சாலை நகர் திருவிழாக்கோலம் பூண்டு உள்ளது.