சென்னை: சமூக சேவகி அப்சரா ரெட்டியின் 'குட் டீட்ஸ் கிளப்' சார்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் பராமரிப்பிற்காக ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டு காசோலையை உயிரியல் பூங்கா இயக்குநர் ஆஷிஷ் ஸ்ரீ வஸ்தவாவிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை நடிகை நிக்கி கல்ராணி பேட்டரி வாகனத்தில் சென்று பார்வையிட்டதோடு, விலங்குகளின் பெயரைக் கூறி அழைத்து மகிழ்ந்தார். மேலும், விலங்குகளை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களிடமும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, நிக்கி கல்ராணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விலை உயர்ந்த நாய்களை வாங்கி வீட்டில் பராமரிப்பது போன்று காடுகள் மற்றும் இது போன்ற பூங்காக்களில் பராமரிக்கப்படும் உயிரினங்களையும் நாம் தத்தெடுத்து அவைகளுக்கு தேவையானவற்றை வழங்க நிதியுதவி வழங்கி பராமரிக்க முன்வர வேண்டும்.
இதையும் படிங்க: பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு..! அரசு கூறும் காரணம் என்ன?
பொதுமக்கள் ஒரு விலங்கை தத்தெடுப்பதற்கு பணம் செலுத்தலாம் அது பூனையாக இருக்கலாம், புலியாக இருக்கலாம் அல்லது யானையாக கூட இருக்கலாம். இதுமட்டும் அல்லாது, விலங்குகளுக்கு உணவு மட்டுமின்றி மருத்துவ செலவும் தேவைப்படுகிறது. நாம் அதை தத்தெடுப்பதன் மூலம் அதற்கான முழுமையான மருத்துவ செலவு மற்றும் உணவு கிடைக்கும்.
எனக்கு மிருகங்களை மிகவும் பிடிக்கும் எங்கள் வீட்டில் மூன்று நாய்கள் உள்ளது. நமக்கு பிடித்த விலங்குகளை நாம் தத்தெடுத்துக் கொள்ளலாம். நான் நாய்களை காசு கொடுத்து வாங்கவில்லை எனக்கு பரிசாக வந்ததை நான் வளர்த்து கொண்டிருக்கிறேன்.
சாலைகளில் மாடுகளை விடுவது ரொம்ப கஷ்டமான விஷயம். அதுவும் ஒரு உயிர்தான் சாலையில் மாடுகளை விடாதீர்கள். நாங்கள் அதை ஒரு கடவுள் போல் பார்க்கிறோம். அது போல் சாலையில் மாடுகளை விடுகிறீர்கள் என்றால், ப்ளீஸ் அந்தமாரி பண்ணாதீங்க" என்று கையெடுத்து கும்பிட்டபடி கேட்டுக் கொண்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்