சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாஹூ கடந்த 2018ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டபோது இவருக்கு, தமிழக கால்நடைத் துறைச் செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் புதிய புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று (நவ.8) அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற பெருமையை அர்ச்சனா பட்நாயக் பெறுகிறார்.
இதையும் படிங்க : என்ஓசி கொடுக்காமல் அலைக்கழிப்பு.. வாடிக்கையாளர் செய்த தரமான சம்பவம்! - மூன்று மணி நேரம் தவித்த நிதி நிறுவன ஊழியர்கள்!
தற்போது அர்ச்சனா பட்நாயக் தமிழக அரசின் சிறு, குறு தொழில்துறை செயலாளராக உள்ளார். தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலம், வரும் 2026ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னின்று நடத்தும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
அர்ச்சனா பட்நாயக் : ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக், கடந்த 2002ம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தார். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றி உள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்