நீலகிரியில் தொடரும் கனமழை.. ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு; மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரங்களுக்கும் மேலாக மேகமூட்டத்துடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் அதிக அளவில் மழை பெய்து வருவதால், நிலத்தின் ஈரத்தன்மை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதன் காரணமாக மலைப் பாதையில் சாலையோரங்களில் மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறைகள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால், நீலகிரி மாவட்டத்தில், இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், இங்கு இருக்கும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தளங்களுக்கு செல்லாமல் தங்கும் அறையில் முடங்கி கிடக்கின்றனர்.
தொடர்ந்து, மலைப்பாதையில் கடும் மேகமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஊர்ந்து செல்கின்றனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.