ஆளில்லா நேரத்தில் கைவரிசை காட்டிய பெண்கள்:மாயமான பொருட்கள்! - ஸ்விட்ச் பாக்ஸ்
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள டாணாபுதூர் பகுதியைச் சேர்ந்தவர், பழனிச்சாமி (33). இவர் அவிநாசி சாலை மின்வாரிய அலுவலகம் எதிரே இரும்பு கிரீல், கேட் தயாரிக்கும் பட்டறை வைத்துள்ளார். இவர் பட்டறையைப் பூட்டி விட்டுப் பொருட்கள் வாங்க வெளியே சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது பட்டறையில் வைக்கப்பட்டிருந்த கேபிள் மற்றும் இரும்பு உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்பு அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் முதலில் இரண்டு பெண்கள் நோட்டமிட்டுச் செல்கின்றனர். பின்னர் பட்டறையின் பக்கவாட்டுப் பகுதியில் நுழைந்த ஒரு பெண் அங்கு வைக்கப்பட்டிருந்த கேபிள், ஸ்விட்ச் பாக்ஸ், இரும்புப் பொருட்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களைத் தான் கொண்டுவந்த பைக்குள் போட்டு திருடிச் செல்கிறார்.
பின்னர் பக்கவாட்டுப் பகுதி வழியாக வெளியேறிய அந்தப் பெண் அங்கு நின்றிருந்த மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து வெளியேறுகிறார். சிறிது நேரம் கழித்துப் பொருட்களை திருடிச்சென்ற பெண், ஐந்து பேர் கொண்ட பெண்கள் குழுவாக சாலையில் நடந்து செல்கின்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
மக்கள் நடமாட்டம் உள்ள சாலை அருகே பெண்கள் குழுவாக சேர்ந்து பகல் நேரத்தில் சர்வ சாதாரணமாக பொருட்களை திருடிச் சென்றது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து புஞ்சைப் புளியம்பட்டி காவல் நிலையத்தில் உரிமையாளர் பழனிச்சாமி அளித்தப் புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.