தீக்கிரையான திருமண பந்தல்: உயிர் தப்பிய மணமக்கள்... நெல்லையில் நடந்தது என்ன? - negligence of electricity board fire accident
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: நெல்லைப் பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் விக்ரமன். இவரது மகளுக்கு இன்று காலை வீட்டில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன் ஓலை பந்தல் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் விக்ரமன் வீட்டின் முன்பு உள்ள மின்கம்பத்தில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு, திருமண பந்தலில் தீப்பொறிகள் விழுந்தன.
இதனால் சில நிமிடத்தில் திருமண பந்தல் முழுவதும் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. உடனடியாக வீட்டிலிருந்த மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து நெல்லை பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். எனினும் திருமண பந்தல் முழுவதும் தீயில் எரிந்து கருகி நாசமானது.
இதுகுறித்து அப்பகுதி நரிக்குறவர் காலனி பொதுமக்கள் மற்றும் மணமகளின் தந்தை விக்ரமன் கூறுகையில், "எங்கள் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய மின் வயர்கள் பொருத்தப்படவில்லை. எனவே தான் இன்று காலை மின் விபத்து ஏற்பட்டு பந்தல் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. எனவே உடனே எங்கள் பகுதியில் பழைய மின் வயர்களை மாற்றி புதிய மின் வயர்கள் பொருத்த வேண்டும்" என்று தெரிவித்தனர்.