திருப்பத்தூர் சர்க்கரை ஆலை அதிகாரியால் குளறுபடி? ரூ.1.50 கோடி நஷ்டமடைந்ததாக விவசாயிகள் வேதனை - விவசாயிகள் செய்தி
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். அறுவடை காலம் வந்தும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சில அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் அறுவடைக்கு தயாரான நிலையிலிருந்த கரும்பு வெட்டும் உத்தரவில் குளறுபடி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், திருப்பத்தூர் சர்க்கரை ஆலை அதிகாரிகளின் குளறுபடியால் சுமார் 1.50 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக கரும்பு விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும், அறுவடை செய்தும் பலன் இல்லாமலும், எடையில் குளறுபடி ஏற்பட்டதாலும், வெட்டும் உத்தரவு மற்றொருவரின் பெயரில் வழங்கப்பட்டதாலும் விவசாயிகள் என்ன செய்வது என்று அறியாமல் மன உளைச்சலில் உள்ளனர்.
மேலும், விவசாயிகள் அறுவடை செய்த கரும்பை ஆலைக்கு எடுத்துச் செல்ல வாகனம் அனுப்பாமல் இரண்டு மாதத்திற்கு மேல் அறுவடை செய்த கரும்புகள் நிலத்திலேயே காய்ந்து வீணானதால், விவசாயிகள் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரம், கரும்பு ஆலையில் கரும்பை வெட்டுவதற்கு நிலையான விலையை நிர்ணயிக்குமாறும், முறையாக பணியாற்றாத திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.