காரில் கோடு போட்ட காட்டு யானை - வாகன ஓட்டிகள் அச்சம்!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம், கோத்தகிரி மலைப்பாதையில் உள்ள குஞ்சப்பனை வனப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. இவைகள் உணவு மற்றும் நீர் நிலைகளைத் தேடி இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, கோத்தகிரி சாலையைக் கடந்து மற்ற வனப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 6) இரவு கோத்தகிரி மலைப் பாதையில் குஞ்சப்பனை அருகே ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை, அப்போது சாலையில் வந்து கொண்டிருந்த காரை வழிமறித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டுநர், வாகனத்தை பின்னோக்கி ஓட்டினார். அப்போது காட்டு யானை வாகனத்தை விடாமல் துரத்தி வந்துள்ளது. மேலும் வாகனத்தின் முன் பகுதியை தந்தத்தால் குத்தி தும்பிக்கையால் தாக்கி உள்ளது. இதனையடுத்து யானையின் பிடியில் சிக்காமல் இருக்க தனது சாமர்த்தியத்தால் காரை வேகமாக ஓட்டியதால், காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
மேலும் அந்த வழியே வாகனத்தில் வந்தவர்கள் கோத்தகிரி நோக்கி முன்னோக்கிச் செல்லாமல், பாதி வழியிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதனைத் தொடர்ந்து மலைப்பாதையின் சாலை ஓரத்தில் இருந்த தாவரங்களை தின்ற பின்னர், காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடனேயே பயணிக்கத் தொடங்கினர்.