நெல்லுக்கு களையெடுப்பது போல் அதிமுகவில் களையெடுப்பு - எடப்பாடி பழனிச்சாமி அதிரடி - தெலங்கானா கவர்னர் தமிழிசை செளந்தர்ராஜன்
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் இல்ல திருமண விழா இன்று நடைபெறுகிறது. முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களுக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.
பின்னர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, "டெல்டா மாவட்டங்களில் முக்கிய பிரச்சினையாகக் காவிரி நீர்ப் பிரச்சினை இருந்தது, 50 ஆண்டுக்கால பிரச்சினைக்குத் தீர்வு கண்ட அரசு அதிமுக. டெல்டா பாசத்தின் 8 மாவட்ட விவசாயிகள் கோரிக்கை ஏற்று, மத்திய அரசிடம் பேசி போராடி டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவித்தோம்.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்க நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளனர். திமுக அரசு வந்தால் மின் தடையும் வந்துவிடும். அதிமுகவில் என்னைப் போல் ஒரு லட்சம் பழனிசாமி இருக்கிறார்கள். இந்த பழனிசாமி இல்லை என்றால் இன்னொருவர் ஆள்வார். ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் வரை அதிமுகவை எவராலும் தொட்டுப் பார்க்க முடியாது.
நெல் பயிர் நடவு செய்யப்பட்ட பின் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் களை எடுக்கப்படும். அது போல் அதிமுகவில் களை எடுக்கப்பட்டு விட்டது. இனி அதிமுக என்னும் பயிர் செழித்து வளரும்” என தெரிவித்தார். இந்த திருமண விழாவில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பால்வளத் தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம், நிக்கல்சன் வங்கி தலைவர் சரவணன், கவுன்சிலர் கோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.