மதுபோதையில் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த மருத்துவர்.. வைரலாகும் வீடியோ! - doctor argue with police
🎬 Watch Now: Feature Video
Published : Nov 7, 2023, 11:16 AM IST
நீலகிரி: மதுபோதையில் காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்த மருத்துவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் பகுதியில் வசித்து வருபவர், சாஹித். அவருடைய மகள் மரியம் (6) என்பவருக்கு கீழே விழுந்து காயம் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து, தனியார் மருத்துவ மையத்தில் மருத்துவராக இருக்கும் முரளி சிறுமிக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஆனால், அவர் குடிபோதையில் உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சாஹித் மருத்துவரிடம், “குடிபோதையில் சிகிச்சை அளிக்கிறீர்கள். மருத்துவராகிய நீங்கள் இவ்வாறு செய்யலாமா?” என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த மருத்துவர், குடிபோதையில் தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து மருத்துவ மையத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகளிடமும் மருத்துவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், இந்த சம்பவத்தை பொதுமக்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மருத்துவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.