பங்குனி உத்திரம் - குலதெய்வக் கோயிலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி வழிபாடு! - விக்னேஷ் சிவன் நயன்தாரா
🎬 Watch Now: Feature Video
தஞ்சை: தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள வழுத்தூரில் காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில், இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலதெய்வக் கோயில் ஆகும். இந்நிலையில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி விக்னேஷ் சிவன் மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான நயன்தாரா ஆகியோர் காமாட்சியம்மன் கோயிலில் இன்று (ஏப்ரல் 5) வழிபாடு நடத்தினர்.
திருமணத்திற்கு முன் இருவரும் கடந்த ஆண்டு இந்த கோயிலுக்கு வந்து சென்ற நிலையில், தற்போது மீண்டும் தரிசனம் செய்துள்ளனர். பங்குனி உத்திர விழாவையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்டப் பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள நொண்டி கருப்பு, முனியாண்டவர், மதுரை வீரன் உள்ளிட்டப் பரிவார தெய்வங்களையும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியர் வழிபட்டனர்.
இருவரது வருகையை அறிந்து சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்தில் திரண்டனர். நட்சத்திர தம்பதியரை காண ஒரே நேரத்தில் ஏராளமானோர் கோயிலுக்கு வர முயன்றதால், கோயிலின் வெளிக்கதவு மூடப்பட்டது. பின்னர் பாதுகாப்புப் பணிக்கு வந்திருந்த காவல்துறையினர், கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் கோயில் வளாகத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் பலர், தங்கள் செல்போனில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியரை வீடியோ எடுத்தனர். நட்சத்திர தம்பதியர் வாடகைத்தாய் மூலம் அண்மையில் இரட்டைக்குழந்தைகளைப் பெற்ற நிலையில், அவர்களின் நலன் வேண்டி குலதெய்வ கோயிலில் வழிபாடு நடத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.