மனு கொடுக்க வந்த 100 வயது மூதாட்டியை தனது காரில் வீட்டுக்கு அனுப்பிய தருமபுரி எம்.எல்.ஏ! - Vairal Video
🎬 Watch Now: Feature Video
Published : Sep 4, 2023, 7:32 PM IST
தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் இன்று (செப். 04) மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கத் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முனியம்மாள் என்பவர் மனு கொடுக்க வந்திருந்தார்.
அவர் மனுவைக் கொடுத்துவிட்டு தனது பெயரனுடன் தள்ளாத வயதில் வெயிலில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தனது காரில் வந்து கொண்டிருந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மூதாட்டி ஒருவர் நடக்க முடியாமல் வருவதைப் பார்த்ததும், காரை நிறுத்தி இறங்கினார்.
பின்னர், மூதாட்டியை விசாரித்தார். அப்போது அவர் தனக்கு வயது 100 ஆவதாகவும் தான் நிலம் தொடர்பாகப் புகார் மனு அளிக்க வந்ததாகவும் தெரிவித்தார். உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தனது உதவியாளரை அழைத்து, மூதாட்டிக்கு உணவு வாங்கி கொடுக்க கூறி உள்ளார். மேலும், பேருந்து நிலையத்திற்கு காரில் ஏற்றிச் சென்று பேருந்தில் அனுப்பி வைத்து வருமாறு தெரிவித்துள்ளார்.
அதன்படி அவரது உதவியாளர் மூதாட்டிக்கு உணவு வாங்கி கொடுத்து, பேருந்தில் அனுப்பி வைத்துள்ளார். தருமபுரி சட்டமன்ற உறுப்பினரின் இந்த செயல் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பொது மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.