பழனி முருகன் கோயிலுக்கு 72 கிலோ எடையுள்ள காவடியை சுமந்து வந்த பக்தர்கள்! - பழனி
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: பழனி பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு 72 கிலோ எடையிலான காவடியை சுமந்து வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பக்தர்கள் மலையடிவாரத்தில் ஆடி பாடி வலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் 72 கிலோ எடை கொண்ட காவடியை, வண்ண காகித பூக்களால் அலங்காரம் செய்து நேர்த்திக் கடனாக எடுத்துச் சென்றனர். மலை அடிவாரத்தில் உள்ள கிரிவல பாதையில் பக்தர்கள் மேள தாளம் முழங்க காவடியை சுமந்து ஆடிப்பாடி கிரிவலம் வந்தனர்.
நேற்று (ஜூலை 23) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பழனி பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். இதனால் மலை அடிவாரத்தில் உள்ள ரோப்கார் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.