செல்போன் டவரை காணவில்லை - காவல் நிலையத்தில் புகாரளித்த ஏர்செல் ஊழியர்கள் - கோயம்பேடு வடக்கு மாடவீதி
🎬 Watch Now: Feature Video
சென்னை: கோயம்பேடு வடக்கு மாடவீதி பகுதியில் குடியிருப்பவர்கள், சந்திரன், கருணாகரன் மற்றும் பாலகிருஷ்ணன். இவர்களுக்குச் சொந்தமான இடத்தில் ஏர்செல் செல்போன் டவர் ஒப்பந்த அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக மாத வாடகையாக 30 ஆயிரம் ரூபாய் வரை ஏர்செல் நிறுவனம் வழங்கி உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஏர்செல் நிறுவனம் செயல்படாமல் இருந்த காரணத்தினால், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏர்செல் நிறுவனத்திலிருந்து வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகை தராமல் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் அண்மையில் செல்போன் டவர்களை கணக்கிடும் பணியில் நிறுவனம் ஈடுபட்டது.
அப்போது, கோயம்பேடு பகுதியில் வைத்திருந்த செல்போன் டவர் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக புரசைவாக்கத்தில் உள்ள ஏர்செல் நிறுவனத்தின் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் ஏர்செல் டவரை காணவில்லை என புகார் அளித்துள்ளார். மேலும் இந்த ஏர்செல் டவரின் மதிப்பு 8 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், செல்போன் டவர் துருப்பிடித்து இருந்ததாகவும், கீழே விழும் சூழ்நிலையில் இருந்ததால் அதனை கழற்றி பழைய இரும்புக் கடையில் போட்டுவிட்டதாகவும் நிலத்தின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக கோயம்பேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் குடிசைகளுக்கு தீ.. நாமக்கல் அருகே பதற்றம்; போலீசார் குவிப்பு!