சேலத்தில் தலப்பாக்கட்டி பிரியாணியில் கரப்பான் பூச்சி சர்ச்சை.. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ்! - salem hotel
🎬 Watch Now: Feature Video
Published : Oct 19, 2023, 9:11 PM IST
சேலம்: சேலம் ஐந்து ரோடு அருகே பிரபல திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் தாரமங்கலத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் உணவருந்தச் சென்றுள்ளார். அப்போது அவர்கள், தாங்கள் வாங்கிய பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே மோகன்ராஜ், இதுகுறித்து ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் மேலாளரிடம் முறையிட்டுள்ளார். அதற்கு அவர்கள் முறையாகப் பதில் அளிக்காமல் மெத்தனமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அவர், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்குப் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு நேரில் வந்து சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஹோட்டலில் இருந்த சமையல் கூடம், பயன்படுத்தப்படும் சமையல் பொருட்கள், கிடங்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது உணவுப் பாத்திரங்கள் மற்றும் குப்பைக் கூடைகள் மூடப்படாமல் இருந்தது தெரியவந்தது. இதனால் கரப்பான் பூச்சி பிரியாணியில் விழுந்திருகலாம் என உடனடியாக அவற்றை மூடி வைக்குமாறு உத்தரவிட்ட அலுவலர்கள், ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், சரிவரப் பாதுகாப்பு இல்லாத நிலையில் உண்ணும் உணவுப் பொருளை அஜாக்கிரதையாகக் கையாண்ட தலப்பாக்கட்டி பிரியாணி உணவகத்துக்கு விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பினர். அதேபோல உணவின் நிலை குறித்து அறியப் பகுப்பாய்வுக்கும் எடுத்துச் சென்றனர். பிரபல தலப்பாக்கட்டி பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்த விவகாரம், பிரியாணி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.