‘மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ - சிஐடியு ஆர்ப்பாட்டம்! - தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு
🎬 Watch Now: Feature Video
வேலூர்: மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பைச் (சிஐடியு) சேர்ந்தவர்கள் வேலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் வேலூர் கிளை தலைவர் எம்.கோவிந்தராஜ் தலைமை வகித்தார். செயலர் து.ஜெகன், பொருளாளர் எம்.சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாநிலக்குழு எம்.பி.ராமச்சந்திரன், மாவட்ட செயலர் எம்.பரசுராமன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், “மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதியில் போடப்பட்ட ஒப்பந்தப்படி 06.01.1998 முதல் இன்று வரை பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில், ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் நியமித்து நிரந்தரம் செய்திட வேண்டும்.
மேலும், 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை, திமுக தேர்தல் வாக்குறுதிப்படி நிரந்தரம் செய்திட வேண்டும். இது மட்டுமின்றி கே2 அக்ரிமெண்ட் நடைமுறையை ரத்து செய்து சிட் அக்ரிமெண்ட் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை வழங்கிட வேண்டும். கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பணிமாற்றம் செய்திட வேண்டும்.
ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பகுதி நேர பணியாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிளாஸ் 1 மற்றும் 2 அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு தொழிலாளர்களுக்கு வழங்குவது போல 4 ஆண்டுகள் என இருந்ததை 10 ஆண்டுகள் என மாற்றியுள்ளதை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.