அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து சிறுவர்கள் தப்பி ஓட்டம் - 3 தனிப்படைகள் அமைப்பு! - அரசு பாதுகாப்பு இல்லம்
🎬 Watch Now: Feature Video
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் கடந்த 27ஆம் தேதி 6 சிறார்கள் தப்பி ஓடினர். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று ( மார்ச் 29 ) வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
முன்னதாக காகிதப்பட்டறை பகுதியில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் அமைச்சர் கீதா ஜீவன் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், “தமிழ்நாடு முழுவதும் 8 கூர்நோக்கு இல்லங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 36 குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலூரில் உள்ள அரசு பாதுகாப்பு இல்லத்தில் 6 பேர் தப்பிச் சென்றனர்.
வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு இல்லங்களிலும் சிறுவர்கள் தப்பிச்செல்லாத வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் காலங்களில் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பு இல்லங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர், அரசு பாதுகாப்பு இல்லத்தில் தப்பிச் சென்ற ஆறு சிறுவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தப்பிச் சென்றவர்கள் விரைவில் பிடிபடுவார்கள். அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அவர், “பயமாக இருக்கிறது என்று பாதுகாவலர்கள் தெரிவித்தால், ஏன் இந்தப் பணிக்கு அவர்கள் வரவேண்டும்” என்று கூறினார். வேலூரில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு பணிநிரந்தரம் குறித்து ஆலோசனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.
இதையும் படிங்க: 'தயிர்' to 'தஹி' - ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி மொழியா? - மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை!