"அவருக்கு உடம்பு சரியில்லை ரெஸ்ட் எடுக்கட்டும்" - உதயநிதி ஸ்டாலின் வீடியோ வைரல்!
🎬 Watch Now: Feature Video
சென்னை: முதலமைச்சரை சந்தித்து சென்ற பிரக்ஞானந்தாவிடம், செய்தியாளர்கள் கேள்வி கேட்ட பொழுது, “அவருக்கு இப்பொழுது உடம்பு சரியில்லை ரெஸ்ட் எடுக்கட்டும்” என உதயநிதி ஸ்டாலின் கூறி, நன்றி தெரிவித்து பிரக்ஞானந்தாவை அனுப்பிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) சார்பில், இந்தாண்டு 10வது சதுரங்க உலகக் கோப்பை 2023 கடந்த ஜூலை 30ஆம் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். கடந்த வாரம் ஆகஸ்ட் 23ம் தேதி அஜர்பைஜானில் நடைபெற்ற ஃபிடே உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினார்.
முதல் 2 சுற்றுகளை டிரா செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, டைப்ரேகர் சுற்றில் 2ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றிவாகை சூடினார். மேலும், அடுத்த வருடம் நடைபெறும் செஸ் வீரர்களிடையே மிக முக்கியமாக பார்க்கக் கூடிய செஸ் கேண்டிடேட் போட்டிக்கு பிரக்ஞானந்தா நேரடியாக தகுதி பெற்றார்.
இந்நிலையில், உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், நேரு அரங்கில் தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அவரைப் பாராட்டிய முதலமைச்சர், உலகக் கோப்பை செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி 2-ம் இடம் பிடித்த அவரது சாதனையை ஊக்குவிக்கும் வகையில், 30 லட்ச ரூபாய்க்கான ஊக்கத் தொகை மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.