தஞ்சாவூர்: தமிழ்நாடு பாஜகவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர். ஆனால், தஞ்சாவூரில் தெற்கு மாவட்டம் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், இன்று (ஜன.27) பாஜகவின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பதவி அறிவிப்பு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட புதிய தலைவராக ஜெய் சதீஷ் அறிவிக்கப்பட்டார்.
ஏற்றுக் கொள்ள மாட்டோம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் ஒரு தரப்பினர் அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் கூச்சலிட்டு வாக்குவாதம் செய்தனர். அப்போது அவர்கள், முறையாக தேர்தல் நடத்தாமல் எந்த அடிப்படையில் தலைவரை தேர்ந்தெடுத்தீர்கள்? இவர் ஏற்கனவே எதற்கும் ஒரு விலை உண்டு என்று கூறியுள்ளார். அதனால் இந்த தலைவர் தேர்தலை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என முறையிட்டனர்.
இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதனை மேடையில் அமர்ந்திருந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், பின்னர் நாம் பேசிக் கொள்ளலாம் அனைவரும் அமைதியாக அமருங்கள் என கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அரசுக்கு தமிழிசை கோரிக்கை விடுப்பாரா? -அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சியினர் அமைதி அடைந்தனர். பின்னர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய் சதீஷ் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர் அமைச்சர் எல். முருகன் ஜெய் சதீஷ்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் எல். முருகன், பாஜகவில் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடைபெறுகிறது என்றும் திமுகவில் இது போல் நடைபெறாது எனவும் கூறினார்.
மேலும், இக்கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் பஞ்சாட்சரம், ரகுபதி, தேர்தல் பார்வையாளர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய இணையமைச்சர் முன்னிலையில் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தற்போது தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய் சதீஷ் ஏற்கனவே தலைவராக இருந்து இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.