சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யின் கடைசி படமான ’தளபதி 69’ படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று காலை வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு ’ஜனநாயகன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். நேற்று மாலையே ’ஜனநாயகன்’ படத்தின் இன்னொரு போஸ்டரும் வெளியானது.
நடிகர் விஜய் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு அரசியல் மாநாடு ஒன்றில் தொண்டர்களுடன் செல்ஃபி எடுப்பது போல ’ஜனநாயகன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்திருந்தது. இந்த போஸ்டரைப் பார்த்ததும் பலருக்கும் நினைவுக்கு வந்தது நெய்வேலியில் விஜய் எடுத்த செல்ஃபிதான். போஸ்டரில் மாநாடு தொண்டர்கள் உண்மையில் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்திருந்தார்.
விஜய்யின் நெய்வேலி செல்ஃபி
கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்து வந்தார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வந்தது. அப்போது இந்த படப்பிடிப்பு தளத்திற்கே சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய்யின் ‘பிகில்’ படத்தின் வியாபாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக அவரது பனையூர் வீட்டிற்கு நெய்வேலியிலிருந்து கையோடு அழைத்துச் சென்றனர். இந்நிகழ்வு அப்போது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வருமான வரித்துறையினரின் இரவு, பகல் சோதனைக்கு பின் ஓரிரு நாட்களில் விஜய் மீண்டும் ’மாஸ்டர்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார். வருமான வரித் துறையினரின் சோதனைக்கு பின், நெய்வேலி படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் இந்த பிரச்சனை விஜய், விஜய் மக்கள் இயக்கம், பாஜக என வேறு கட்டத்திற்கு சென்றது. என்.எல்.சியின் பாதுகாக்கப்பட்ட இடத்தில் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதாக கூறி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl
— Vijay (@actorvijay) February 10, 2020
நிலக்கரி சுரங்கத்தை பாதுகாப்பதற்காகவே போராடுவதாக விளக்கம் கொடுத்தது பாஜக. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தினரும் விஜய்யின் ரசிகர்களும் கூட்டம் கூட்டமாக நெய்வேலி செல்லத் தொடங்கினர். கையில் விஜய் மகக்ள் இயக்கத்தின் கொடி பறக்க விஜய் ரசிகர்களின் பெருந்திரள் கூட்டம் அங்கே கூடியது. கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் போலீசாரும், பாதுகாப்புப்படையினரும் அங்கே குவிக்கப்பட்டனர். கூட்டத்தை கலைந்து போகச்சொல்லி தடியடியும் நடத்தினர்.
ஆனால் அடுத்த நாள் கூட்டம் இன்னும் அதிகமானது. தன்னைப் பார்க்க வந்த பெரும் கூட்டத்தைப் பார்த்த விஜய், ஷூட்டிங் வேன் மீது ஏறி ரசிகர்கள் பட்டாளத்துடன் செல்ஃபி எடுத்தார். அதை அப்போதைய ட்விட்டர் அதாவது தற்போதைய எக்ஸ் தளத்திலும் பதிவிட்டார். கடந்த 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் விஜய்யின் நெய்வேலி செல்ஃபி ட்வீட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த செல்ஃபியை நினைவூட்டும் வகையில் ’ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்திருக்கிறது.
We call him #JanaNayagan #ஜனநாயகன் ♥️#Thalapathy69FirstLook#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu @Selva_ArtDir… pic.twitter.com/t16huTvbqc
— KVN Productions (@KvnProductions) January 26, 2025
மேலே கூறிய சம்பவங்களோ அல்லது நெய்வேலியில் விஜய் எடுத்த செஃல்பியோ ’ஜனநாயகன்’ படத்தில் இடம்பெற வாய்ப்பிருக்கலாம். ஏனென்றால் படத்தினுடைய பெயரின் டிசைனிலும் விஜய்யின் இந்த நெய்வேலி செல்ஃபி உருவம் இடம்பெற்றிருப்பதை கூர்ந்து கவனித்தால் நீங்கள் பார்க்கலாம்.
இதன் மூலம் இயக்குநர் ஹெச்.வினோத்தும் விஜய்யும் கூற வருவது என்ன? படம் முழுக்க முழுக்க விஜய்யின் அரசியல் கருத்துக்களை உள்ளடக்கியதாக இருக்குமா? போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஒருவேளை இந்த சம்பவங்கள் இடம்பெற்றால் அது விஜய்யின் நேரடி அரசியல் திரைப்படமாக இருக்கும். நடிகர் விஜய் இந்த படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். அரசியல் கட்சி துவங்கி முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Nan Aanai ittal……..
— KVN Productions (@KvnProductions) January 26, 2025
Adhu…….🔥#JanaNayaganSecondLook#NanAanaiittal#JanaNayaganVijay#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @PradeepERagav @RIAZtheboss #ஜனநாயகன் pic.twitter.com/ffkx40TqEA
இதையும் படிங்க: விரைவில் வெளியாகுமா துருவ நட்சத்திரம்...? கௌதம் மேனன் சொன்ன தகவல்
ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்தை கேவின் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது தெலுங்கில் வெளிவந்த நடிகர் பாலைய்யாவின் ’பகவந்த் கேசரி’ திரைப்படத்தின் ரீமேக் எனவும் முன்பு இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.