CCTV VIDEO: கடை ஷட்டரை உடைத்து ரூ.53 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு! - சுங்குவார்சத்திரம் போலீசார்
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு (ஜூலை 16) வழக்கம் போல் அப்துல் ரஹீம் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். பின்னர், இன்று (ஜூலை 17) காலை அவர் கடையை திறக்க வந்தபோது கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரஹீம், உள்ளே சென்று பார்த்ததில் கடையில் இருந்த செல்போன்கள் மொத்தமாகக் திருடப்பட்டிருந்ததைக் கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தார். ஆப்பிள், ரெட்மி, ரியல்மீ, சாம்சங், விவோ உள்ளிட்ட பல்வேறு நிறூவனங்களில் மாடல்கள் என மொத்தம் 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது. பின்னர், இது குறித்து உடனடியாக அப்துல் ரஹீம் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதில் ஆட்டோவில் வந்த மூன்று அடையாளம் தெரியாத நபர்கள், இரும்பு ஆயுதத்தின் மூலம் ஷட்டரை உடைப்பது பதிவாகி இருந்தது. மேலும், இருவர் முகத்தை மறைத்துக் கொண்டு உள்ளே சென்று கடையில் உள்ள செல்போன்களை கோணிப் பையில் மூட்டை கட்டி ஆட்டோவில் எடுத்துச் செல்வதும் பதிவாகி இருந்தது.
தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடிச் சென்ற கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: லஞ்ச பணத்தில் வாங்கிய சொத்துக்களை முடக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை!