கடனாக காருக்கு டீசல் போடச் சொன்ன நபர்.. மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியருக்கு அடி உதை! - today latest news in tamil
🎬 Watch Now: Feature Video
Published : Oct 15, 2023, 9:01 AM IST
வேலூர்: குடியாத்தம் மேல்பட்டி சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (அக்.13) இரவு மது போதையில் செட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் காரில் பெட்ரோல் பங்க் வந்துள்ளார்.
அப்போது, பெட்ரோல் பங்கில் பணிபுரியும் சரவணன் என்பவரிடம் காருக்கு கடனாக டீசல் போடும்படி கூறியுள்ளார். அதற்கு சரவணன், தான் கடனாக டீசல் போட முடியாது என்றும், பெட்ரோல் பங்க் உரிமையாளர் மட்டுமே கடனாக டீசல் போட முடியும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து, மது போதையில் இருந்த பாஸ்கர் காரை விட்டு இறங்கி சரவணனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த சரவணன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து குடியாத்தம் காவல் நிலையத்திற்கு வந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், பெட்ரோல் பங்க் உரிமையாளர் மற்றும் படுகாயம் அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் சரவணன் இருவரும் கொடுத்த புகாரின் அடிப்படையில், பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.