புறா மூலம் வந்த புல்லட்.. தூத்துக்குடியில் களைகட்டிய புறா பந்தயம்! - thoothukudi
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: பிரபல கோல்டன் பிஜியன் ஸ்போர்ட்ஸ் சொசைட்டி சார்பில் தூத்துக்குடியில் புறா பந்தயம் முன்னதாக வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது. இந்த பந்தயமானது 780 கிலோமீட்டர் தூரம் வரையிலான தொலைவு போட்டியாக அறிவித்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் இருந்து வருகை தந்த போட்டியாளர்கள், தங்கள் புறாவுடன் இப்போட்டியில் பங்குபெற்றனர்.
இந்த பந்தயமானது தொலைவு கணக்கின் அடிப்படையில் மூன்று வெவ்வேறு பாதைகளில் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் சிங்கராய குண்டாவிலிருந்து தூத்துக்குடி வரையிலும், 600 கிலோ மீட்டர் தூர அளவில் ஆந்திர மாநிலம் தடாவிலிருந்து தூத்துக்குடி வரையிலும், 480 கிலோமீட்டர் தூர அளவில் காஞ்சிபுரத்திலிருந்து தூத்துக்குடி வரையிலும், 200 கிலோமீட்டர் தூர அளவில் தொழுதூரில் இருந்து தூத்துக்குடி வரையிலும், 150 கிலோமீட்டர் தூர அளவில் மதுரையிலிருந்து தூத்துக்குடி வரையிலும் இந்தப் புறா பந்தயங்கள் நடைபெற்றது. இந்தப் புறா பந்தயங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட புறாக்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த புறா பந்தயங்களில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இனிவரும் காலங்களில் புறா பந்தயங்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த புறா பந்தயங்களில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற மனோ என்பவருக்கு சாம்பியன் கோப்பையுடன் இருசக்கர வாகனமான புல்லட் மற்றும் புறாக்கள் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த பன்னீர்செல்வம் என்பவருக்கு சாம்பியன் கோப்பை சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த புறா பந்தய ஆர்வலர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
இதையும் படிங்க: புதுப்பொலிவுடன் வேடந்தாங்கல் சரணாலயம் அமைக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்