உபியில் மீண்டும் புல்டோசர் அரசியல்.. ஆயுத சப்ளையர் வீடு இடித்து தரைமட்டம்.. - MLA raju pal murder
🎬 Watch Now: Feature Video
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2005ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜூ பால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அத்திக் அகமது மாபியா கும்பல் தலைவனாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். இதனால் ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் என்பவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தன.
அதன் காரணமாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், 5 பேர் கொண்ட கும்பல் உமேஷ் பாலை கடந்த சில நாட்களு முன் சுட்டுக் கொன்றது. அப்போது, உமேஷ் பாலுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதனால் ஒரு காவலரும் உயிரிழந்தார். மற்றொரு காவலர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக் கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் காரசார விவாதத்தில் ஈடுபட்டன. இந்த சம்பவத்தின் பின்னணியில் அத்திக் அகமது இருப்பதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதனிடையே உமேஷ் பால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அர்பாஸ் என்பவரை போலீஸார் அண்மையில் என்கவுண்டனர் செய்தனர். தொடர்ந்து உமேஷ் பால் கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரான ஜாபர் அகமது வீட்டை பிரயக்ராஜ் நகர மேம்பாட்டு ஆணைய நிர்வாகம் புல்டோசரை வைத்து இடித்து தரைமட்டமாக்கியது.
மாபியா கும்பலின் தலைவனான அத்திக் அகமதுவின் நெருங்கி உதவியாளராக செயல்பட்டு வந்தவர் இந்த ஜாபர் அகமது. புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்ட வீட்டில் அத்திக் அகமதுவின் மனைவி மற்றும் மகன் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பங்களாவில் போலீசார் நடத்திய சோதனையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜாபர் அகமதுவின் வீடு விதிகளை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருந்ததாகவும், அதற்கான நோட்டீஸ் முன்னரே வழங்கப்பட்ட நிலையில் தற்போது இடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஐந்து மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக தலா 3 இடங்களில் வெற்றி