காலை ஆட்டிக்கொண்டே முறைத்த கரடி - அலறிய வாகன ஓட்டிகள்! - சமுக வலைத்தளம்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: உதகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீப நாட்களாக கரடி, காட்டெருமைகள், மான்கள் போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குறிப்பாக மஞ்சூர், கெத்தை, எடக்காடு பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களில் உலாவரும் கரடிகள் அவ்வப்போது சாலையிலும் உலா வருகின்றன.
இந்நிலையில் உதகையிலிருந்து எடக்காடு செல்லும் சாலையில் கரடி ஒன்று வந்தது. அப்போது சாலையில் வந்த வாகனத்தை கண்டவுடன் சாலை ஓரம் சென்று, காலை ஆட்டிக்கொண்டே வாகனத்தை முறைத்தது. இந்நிலையில் வாகன ஓட்டி ஒருவர் கரடியைப் படம்பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'சாலையில் செல்லும் வாகனங்கள் வனவிலங்குகளைக் கண்டவுடன் வாகனத்தை நிறுத்த வேண்டாம். காட்டு யானைகள், கரடிகள், உள்ளிட்ட வனவிலங்குகள் எளிதில் தாக்கும் குணம் உடையவை. மேலும், இரவு நேரங்கள் மட்டுமல்லாமல் பகல் நேரங்களிலும் சாலைகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் மஞ்சூர் - எடக்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் வேகமாக இயக்காமல் கவனமுடன் செல்ல வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளனர்.