குன்னூரில் மனித - விலங்குகள் மோதல்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்! - Nilgiris news
🎬 Watch Now: Feature Video
நீலகிரி மாவட்டம் 60 சதவீதம் வனப் பகுதிகளை கொண்டதாகும். இங்கு காட்டு யானைகள், புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, காட்டெருமை மற்றும் மான் போன்ற வனவிலங்குகள் அதிகம் காணப்படுகிறது. இந்த நிலையில், மாவட்டத்தின் பல இடங்களில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் தாக்கி அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இந்த நிலையில், மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் பேரில் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுக்காடு பழங்குடியினர் கிராமத்தில் மனித - விலங்குகள் மோதல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் வன விலங்குகளைக் கண்டால் பழக்கப்பட்டதுதான் என்று அருகில் செல்லக் கூடாது, வனவிலங்குகள் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள மனிதர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், அதனால் வன விலங்குகளிடம் இருந்து மனிதர்களாகிய நாம்தான் விலகிச் செல்ல வேண்டும் என்றும், தற்போதுள்ள நவீன காலத்தில் செல்போனில் வனவிலங்குகள் அருகே சென்று செல்பி எடுப்பதால் வனவிலங்குகள் கோபமடைந்து மனிதர்களை தாக்க முற்படுகிறது எனவும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மேலும், வாகன ஓட்டிகள் மலைப்பாதையில் வனவிலங்குகளைக் கண்டதும் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், செல்போனில் வனவிலங்குகளை வீடியோ பதிவு செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேநேரம், பழங்குடியின மக்களின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வனவர்கள் கோபால கிருஷ்ணன், ராஜ்குமார், முருகன் மற்றும் வனக்காப்பாளர்கள் பழனி மலை திலீப் சுப்பிரமணி மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் புதுக்காடு மற்றும் அதன் அருகில் உள்ள பழங்குடியின மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.