சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்என்ரவி ஆய்வு மேற்கொண்டு, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பல்கலைக்கழக பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, கோட்டூர்புரம் போலீசார் ஞானசேகரன் என்பவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை கையில் எடுத்துள்ள நிலையில், இந்த வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 28) சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் மாணவியிடம் இருந்து கல்வி கட்டணம் ஏதும் அண்ணா பல்கலைக்கழகம் வசூலிக்க கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழு விசாரிக்கும்...மாணவிக்கு ரூ.25 லட்சம் வழங்கவும் நீதிபதிகள் உத்தரவு
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்என்ரவி இன்று (டிசம்பர் 28) சனிக்கிழமை அண்ணா பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அங்கு, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்துள்ளார். தொடர்ந்து, மாணவர்கள் புகார் அளிக்க வேண்டுமென்றால், யாரிடம் புகார் அளிக்கின்றனர் என்றும், எவ்வாறு புகாரை பேராசிரியர்கள் அணுகுகின்றனர்? என்பது குறித்தும் மாணவர்களிடையே கேட்டு அறிந்துள்ளார்.
மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய ஆய்வு 2 மணி வரை நீடித்துள்ளது. இந்த ஆய்வில், தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் கோபால், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆபிரகாம், பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்துள்ளனர். ஆளுநரின் வருகையையொட்டி பல்கலைக்கழக வளாகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.