நீலகிரி: கூடலூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக போக்குக்காட்டி, சேரங்கோடு பகுதியில் குடியிருப்புகளை சேதப்படுத்தி வந்த CT 16 புல்லட் ராஜா என்ற காட்டு யானையை, கும்கி யானைகள் உதவியுடன் இரண்டு டோஸ் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் வளைத்து பிடித்துள்ளனர்.
தொடர்ந்து, பிடிப்பட்ட யானை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கண்காணிக்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு, காப்பி காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக CT 16 கோட்டமலை பாஸ்கர் என்று வனத்துறையினரால் பெயரிடப்பட்ட புல்லட் ராஜா என்ற காட்டு யானை, 48 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து, சேதபடுத்தி, வீட்டில் உள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் மக்களை அச்சுறுத்தி வந்துள்ளது.
இதனால், காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் வருவதை கட்டுப்படுத்த, பல்வேறு யுக்திகளை வனத்துறையினர் மேற்கொண்டு வந்துள்ளனர். அதன்படி, இரண்டு மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், யானையை விரட்டும் பணியாளர்கள், முதுமலையில் யானைகளை கட்டுப்படுத்தும் சிறப்பு பயிற்சி பெற்ற பணியாளர்கள் என 75 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நான்கு குழுக்களாக பிரிந்து யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
![கும்கி யானை, புல்லட் ராஜா காட்டு யானை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/28-12-2024/23209102_1.jpg)
கும்கி யானை:
அதற்காக, அதிநவீன ட்ரோன் கேமராக்கள் மற்றும் இரவு நேரங்களில் யானை நடமாட்டத்தை துல்லியமாக கண்டறியும் தெர்மல் ட்ரோன் கேமரா (Thermal drone camera) மூலமும், பொம்மன் மற்றும் சீனிவாசன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் உதவியுடன், புல்லட் யானை ஊருக்குள் நுழைவதை தடுக்கும் பணியில் வன ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண் யானை உயிரிழப்புக்கு காரணம் என்ன? குட்டியை கூட்டத்துடன் இணைக்க வனத்துறை முயற்சி!
இந்த நிலையில், CT 16 என்கிற புல்லட் ராஜா காட்டு யானை, நேற்று முன்தினம் இரவு, பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அருகேயுள்ள மளவாஞ்சாரப்பாடி அரசு தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள மூன்று வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை இடித்து சேதப்படுத்தியுள்ளது. இதில், அதிர்ஷ்டவசமாக ஜன்னல் அருகே யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மயக்க ஊசி செலுத்துதல்:
இதனையடுத்து, தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டிள்ள வனப்பகுதிகளில் போக்குக்காட்டி வந்த CT 16 என்ற புல்லட் ராஜா காட்டு யானையை, நேற்று (டிசம்பர் 27) வெள்ளிக்கிழமை காலை முதலே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் நேற்று மாலை, சேரம்பாடி பகுதியில் தேயிலை தோட்டத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் முகாமிட்டிருந்த புல்லட் ராஜா காட்டு யானையை, கும்கி யானைகள் உதவியுடன் வன கால்நடை மருத்துவர்கள், முதல்கட்ட மயக்க ஊசியை செலுத்தியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, புல்லட் ராஜா யானைக்கு மீண்டும் இரண்டாவது டோஸ் மயக்க ஊசியை வன கால்நடை மருத்துவர்கள் செலுத்தியுள்ளனர். இதனையடுத்து, மலவன் சேரம்பாடி வனப்பகுதிக்குள் புல்லட் ராஜா யானை பிடிப்பட்டுள்ளது. பிடிபட்ட புல்லட் ராஜா யானையின் உடல்நிலையை வன கால்நடை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "முதன்மை தலைமை வனபாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் ஆணையின்படி, முதுமலை புலிகள் காப்பக வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநரின் கண்காணிப்பில், கூடலூர் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலரின் தலைமையில், சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர் கலைவாணன் மற்றும் குழுவினரால் கொளப்பள்ளி, அய்யங்கொல்லி பகுதியில் காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டுள்ளது.
இப்பணியில் உதகை காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, பிடிபட்ட காட்டு யானை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அறிவியல் சார்ந்த அணுகுமுறைகளில் கண்காணிக்கப்பட்டு, பின்னர் அங்குள்ள அடர் வனப்பகுதியில் விடுவிக்கப்படும்” என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.