அண்ணமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா! விமரிசையாக நடைபெற்ற பந்தக்கால் நடும் விழா! - today news
🎬 Watch Now: Feature Video
Published : Sep 21, 2023, 11:10 AM IST
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதத்தில் நடைபெறும் இத்திருவிழா, வரும் நவம்பர் 14ஆம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெறும். இவ்விழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருகை புரிவார்கள்.
கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. அதன் படி அண்ணாமலையார் கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர், சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து பஞ்சமுக தீப ஆராதனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் சுற்றி வந்து ராஜகோபுரம் எதிரே, வேத மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது. இந்நிகழ்வில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.