ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கோயில்களில் குவியும் மக்கள்!
🎬 Watch Now: Feature Video
தேனி : பெரியகுளம் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில் அருகே உள்ள வராக நதியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடி, பிண்டம் வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
பெரியகுளம் பகுதியில் உள்ள அருள்மிகு பாலசுப்ரணிய திருக்கோயில் வராக நதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாக பெரியகுளத்தில் தான் இரண்டு மரங்களுக்கு நடுவில் வராக நதி செல்கிறது இதனால் காசிக்கு சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்து இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இந்த ஆற்றில் இருகரைகளிலும் எதிர் எதிரே ஆண், பெண் மருத மரங்கள் உள்ளதால் இறந்த முன்னோர்களுக்கு வருடந்தோரும் திதி மற்றும் தர்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட். 16) ஆடி அமாவாசையை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான பொது மக்கள், பெரியகுளம் பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தேன், பால் பச்சரிசி, வாழைப்பழம், எள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு பிண்டம் செய்து வைத்து தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டு பிண்டத்தை வராக நதி ஆற்றங்கரையில் கரைத்தனர். இந்நிகழ்வில் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர்.