மிளகாய் கரைசல் அபிஷேகம், அரிவாளில் ஏறி அருள்வாக்கு - இது கருப்பசாமி ஸ்பெஷல்
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: ஆடி அமாவாசை முன்னிட்டு கருப்பசாமி கோயிலில் பூசாரிக்கு 108 கிலோ மிளகாய் கரைசலில் அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது
தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நடப்பனஅள்ளி கிராமத்தில் ஸ்ரீ பெரிய கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் முதல் நாள் அமாவாசையை முன்னிட்டு நேற்று மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரிய கருப்பசாமிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு கோழி பலியிட்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இக்கோயிலில் அருள்வாக்கு சொல்லும் பூசாரி இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு வெள்ளை குதிரையில் ஊர்வலமாக வந்து கத்தி மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார்.
தொடர்ந்து கோயில் முன்பாக பெரிய கருப்புசாமி வாகனமான குதிரை, பசு, கன்றுகளுக்கு பூஜை செய்தனர் . உற்சவமூர்த்தி, கருப்பசாமி வீச்சருவா உள்ளிட்டவைகளுக்கும் பல்வேறு பூஜைகள் செய்து தீ மூட்டி 108 கிலோ மிளகாயை தீயில் போட்டு கோயில் பூசாரி சாமி ஆடி 11 படிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை அடுத்து கோயில் பக்தர்கள் குடும்பங்களில் தீவினை அகன்று நல்லவை ஏற்பட 108 கிலோ மிளகாய் அரைத்து மிளகாய் பொடி கரைசலை பூசாரி மீது ஊற்றினர். அதற்கு பிறகு பூசாரி பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருள் வாக்கு அருளினார் .
வினோத வழிபாடு நிகழ்ச்சி இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அமாவாசை தினங்களில் நடைபெறுவது வழக்கம். இதில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை: சென்னையில் மட்டும் 9.08 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு!