திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவக்கம்! - devotees
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதாவது இன்று தொடங்கி 10 நாட்கள் இந்த ஆடி பிரம்மோற்சவ விழா நடைபெறும். அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுக்கு 4 முறை கொடியேற்றம் நடைபெறும்.
உத்ராயன புண்ணியகாலம், தட்சிணாயின புண்ணிய காலம், ஆடிப்பூர பிரம்மோற்சவம் மற்றும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆகிய 4 முறை கொடியேற்றம் நடைபெறும். இதில் 3 முறை அண்ணாமலையார் கொடி மரத்திலும் ஒரு முறை பராசக்தியம்மன் கொடி மரத்திலும் கொடியேற்றம் நடைபெறும். இன்று ஆடிப்பூர பிரம்மோற்சவத்தையொட்டி இன்று அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மைக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
இதன் பின்னர் பராசக்தியம்மன் கொடிமரத்தின் அருகில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து, இன்று காலை உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு முன்பாக உள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று தொடங்கிய இந்த பிரம்மோற்சவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். மேலும் 10வது நாளான வருகின்ற ஆக.1 ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் தீர்த்தவாரி நடைபெறும். அன்று மாலை ஸ்ரீபராசக்தியம்மனுக்கு வளைகாப்பும், இரவு பராசக்தியம்மன் சன்னதியின் முன்பாக தீமிதி விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.