கோவையில் மதுபோதையில் நடுரோட்டில் படுத்து தூங்கிய நபர்.. பின்னணி என்ன? - மது பிரியர்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோவை மாநகரில் பார்க் கேட் நேரு உள் விளையாட்டு அரங்கம் பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு கூடைப்பந்து, கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டு மைதானங்களும் அமைந்துள்ளன. அதுமட்டுமின்றி அப்பகுதியில் பல்வேறு சாலையோர பாஸ்ட் புட் கடைகள், குளிர்பான கடைகள், பழக்கடைகள், டீ கடைகளும் இயங்கி வருகின்றன.
காலை மற்றும் மாலை வேலைகளில் இப்பகுதியில் அதிகமானோர் நடைபயிற்சி மேற்கொள்வர். குறிப்பாக இப்பகுதியில் வ.உ.சி பூங்கா, வ.உ.சி மைதானம் ஆகியவையும் இருப்பதால் மாலை வேலைகளில் குடும்பத்துடன் அப்பகுதியில் பொழுதை கழிப்பார்கள் இதனால் அந்த பகுதி எப்போது மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கம் எதிரே அதிக மது போதையில் தனது வீட்டில் உறங்குவது போல ஒருவர் நடு ரோட்டில் படுத்து உறங்கியுள்ளார். முதலில் அவரே எழுந்து விடுவார் என பலரும் எண்ணிய நிலையில் அவர் எழுந்திரிக்காமல் உறங்கி கொண்டே இருந்ததால் அப்பகுதியில் இருந்தவர்கள், கடைக்காரர்கள் அவரை எழுப்ப முற்பட்டனர்.
அப்போது அவரது தலையில் ரத்த காயங்கள் இருந்ததாலும், அதிக மது போதையில் இருந்ததாலும் அவரால் எழுந்து நிற்க கூட இயலாமல் போனது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்களே அவரை தூக்கி சாலையோரம் படுக்க வைத்தனர். மது போதையில் நடுரோட்டில் படுத்து உறங்கிய நபரால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் மது விற்பனை கட்டுப்பாடுகளை தாண்டி நடைபெறுவதாக எதிர்க்கட்சியினர், பொதுமக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதிக மது போதையில் நபர் ஒருவர் நடுரோட்டில் படுத்து உறங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.