அட்ரஸ் கேட்பது போல் நடித்து செயின் பறிப்பு.. வைரலாகும் சிசிடிவி.. பெண்கள் ஜாக்கிரதை! - Police Station
🎬 Watch Now: Feature Video
Published : Oct 8, 2023, 8:43 PM IST
சென்னை: பழைய மகாபலிபுர சாலை, துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம், விஜிபி அவென்யூவில் விடுதி ஒன்றில் தங்கி ஜாவா கம்யூட்டர் கோர்ஸ் படித்து வருபவர் மோனிகா (22). இவர் நேற்று முன்தினம், குரோம்பேட்டையில் பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு விடுதிக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், முகவரி கேட்பது போல் நடித்து இளம்பெண்ணின் கவனத்தை திசை திருப்பி, அவர் செல்போனை பார்த்துக் கொண்டிருந்த போது, கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.
அதனையடுத்து, அப்பெண் துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியோடு செயின் பறிப்பு ஆசாமியை அருகில் இருந்த விடுதியில் வைத்து கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து, விசாரணையில் அவர் விருதுநகரை சேர்ந்த ராஜதுரை (20) என்பதும், சென்னை மேட்டுக்குப்பத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி, பள்ளிகரணையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது.
பின்னர், போலீசார் அவரிடமிருந்து 2 சவரன் தங்கச் சங்கிலி, இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேஜிஸ்திரேட் செயின் பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை சொந்த ஜாமீனில் விடுவித்தார்.